எட்டாக்கனி
இந்தியாவில் தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.9,705க்கும், ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் 25ம் தேதி ரூ.9,305க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஓரிரு நாளில் கிராம் 10 ஆயிரத்தை தொடும் என கணிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருவதால், நகை வாங்குவோரை கலக்கம் அடைய வைத்துள்ளது. நடுத்தர குடும்பத்தினருக்கு பெற்ற பெண் பிள்ளைகளுக்கு தங்கம் வாங்குவது மூச்சை முட்டும் செயலாக இருக்கிறது. ஏழை மக்களுக்கு தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது.
இந்த அளவுக்கு தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட மற்ற முதலீடு
களில் நிலையற்ற தன்மை காணப்படுவதாலும், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது வரிகளை உயர்த்தினார். இதனால் நேற்று முன்தினம்
ஒரு டாலருக்கு ரூ.88 என வரலாறு காணாத அளவில் இந்திய ரூபாய் சரிந்துள்ளது. வழக்கமாக உலக நாடுகள், தங்களிடம் கையிருப்பில் உள்ள தங்கத்தை வைத்து கரன்சியை அச்சடிப்பார்கள். ஆனால் உலக நாடுகள் டாலரில் வர்த்தகம் செய்வதால் அமெரிக்கா, எந்த கணக்குமின்றி டாலரை அச்சடித்து வர்த்தகம் செய்கிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பெரிய வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
சாதாரண மக்களை பொருத்தவரை தங்கம் என்பது ஒரு முதலீடு மட்டும் கிடையாது. அவசர பண தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய ஒரு பொருள். நடுத்தர குடும்பங்களுக்கு அவசர பண தேவை ஏற்பட்டால் உடனடியாக வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிடமோ தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்வார்கள்.
தனிநபர் கடன், வீட்டுக்கடன், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடும்போது, நகையை அடகு வைத்து கடன் வாங்குவது எளிமையானதாக இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது 2025ம் ஆண்டில் தங்கத்தின் மீது கடன் வாங்கும் போக்கு அதிகரித்து இருக்கிறதாம். 2025 மார்ச் மாதம் நிலவரப்படி இந்தியாவில் தங்க நகைகளின் மீது வாங்கப்பட்டிருக்கும் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.2.08 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.3 லட்சம் கோடி ரூபாயாகத்தான் இருந்தது.
இந்தியாவில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும் போக்கு 2 மடங்கு அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தரவுகள் குறிப்பிடுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கிராம் தங்கம் ரூ.4,565க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 122 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக ஒன்றிய அரசு குறைத்தது. தற்போது தங்கத்தின் விலை குறைக்க வேண்டும் என்றால், இறக்குமதி வரியை மேலும் குறைக்க வேண்டும். இதுபோன்று ஜிஎஸ்டி வரியையும் ஒன்றிய நிதியமைச்சர் குறைக்க வேண்டும் என நகைக்கடை வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். தங்கத்தின் விலை உயர்வு என்பது இதேநிலை நீடித்தால் ஏழை மக்களுக்கு தங்கத்தை வாங்க நினைத்தாலே கையை சுடும் நிலை ஏற்படும் என்பதில் மாற்றமில்லை.