சர்வதேச சந்தையில் 5 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தங்கம் விலை சரிவு எதிரொலி : சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை!!
மும்பை : சர்வதேச சந்தையில் 5 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தங்கம் விலையில் சரிவை சந்தித்து இருப்பதால் இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அதன்படி, தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவு, டாலர் மதிப்பு சரிவு, போர்ச் சூழல்களால் சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி சிறிய முதலீட்டாளர்களும் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4,300 அமெரிக்க டாலரை தாண்டியது. இது இந்தியாவிலும் எதிரொலித்து, ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 96 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற கணிப்பால் முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்று லாபம் ஈட்டுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சரிவை சந்தித்துள்ளன. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 5.5% குறைந்து ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு 4,115 டாலர்களாக உள்ளது. இது 2020 ஆகஸ்ட் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திங்களன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 4,381 டாலர்களாக இருந்த நிலையில், நேற்று 266 டாலருக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 வரை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.300 குறைந்து கிராமுக்கு ரூ.11,700க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்கப்படுகிறது.