விரைவில் டிடிவி தினகரனை சந்திக்க இருக்கிறேன்: அண்ணாமலை பேட்டி
சென்னை: விரைவில் டிடிவி தினகரனை சந்திக்க இருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை; எனக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததால், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் B.L.சந்தோஷ் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தார். கட்சியின் சில நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்றால், நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். பாஜகவின் பெருமைமிகு தொண்டனாக நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
விவசாய நிலம் வாங்கினால் கூட விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. ரூ.3.50 கோடி கடன் வாங்கியுள்ளேன். கடனுக்கு வட்டி செலுத்தி வருகிறேன். தமிழ்நாட்டில் நான் தான் இளிச்சவாயன்; என் சொந்த சம்பாத்தியத்துக்கும் நான் கணக்கு காட்ட வேண்டி உள்ளது. நாங்கள் மட்டும்தான் எங்கள் நேர்மையை நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது; காமராஜர் ஐயா நிரூபிக்க வேண்டும். அவரது கால் தூசிக்கு சமமான நானும் நிரூபிக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் யாரும் நிரூபிக்க மாட்டார்கள். இதுதான் தமிழ்நாடு அரசியலின் துரதிஷ்டம்.
நாங்கள் நேர்மையாக இருப்பதால், யாரும் சொல்வதற்கு முன்பே இதயத்தை திறந்து காட்டுகிறோம். தமிழ்நாட்டில் ஒருநாள் வரும்... அப்போது யார் அரசியலுக்கு வந்தாலும், அவர்கள் திறந்த கண்ணாடியாக இருக்க வேண்டியிருக்கும். ஓ.பன்னீர்செல்வம், தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்வார்கள். தேஜ கூட்டணியிலிருந்து டிடிவி விலகியது அவரது சொந்த முடிவு. அவருடன் சில நாள்கள் முன்பு பேசினேன். விரைவில் அவரை சந்திக்கவுள்ளேன். என்.டி.ஏ.வில் இருந்து வெளியேறிய தினகரனை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.
பாஜக கஷ்டத்தில் இருந்தபோது டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவாக இருந்தார்கள்; அவர்களோடு அரசியலைத்தாண்டி என் நட்பு தொடரும். ஒரு கூட்டணியில் எவ்வளவு தலைவர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு சந்தோஷம். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக ஈபிஎஸ் கூறியது சரித்திர உண்மை. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது எல்லோருக்குமே தெரியும்; இபிஎஸ் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் முகத்தை மறைத்ததாக நான் பார்க்கவில்லை, Footageல் அப்படி தெரிந்திருக்கிறது என்று கூறினார்.