கோபி அருகே மீன் பெட்டிகளுக்கு இடையே மறைத்து வேனில் 450 கிலோ சந்தன கட்டை கடத்திய 2 பேர் கைது
கோபி: கோபி அருகே வேனில் கடத்தப்பட்ட 450 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சாக்கு மூட்டைகளில் அடைத்து, மீன் கொண்டு செல்லும் பெட்டிகளுக்கு இடையே மறைத்து கடத்திச்சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதி புலிகள் காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்டதால் அந்நியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சந்தன மரங்களை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபி அருகே கெம்மநாய்க்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கேரளாவிற்கு கடத்துவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கெம்மநாய்க்கன்பாளையம் அருகே உள்ள தாசாரிபாளையம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளா மாநிலம் பதிவெண் கொண்ட பிக் அப் வேன் வந்தது.
அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வேனின் முன் பகுதி முழுவதும் மீன் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பெட்டிகள் மட்டுமே இருந்தன. சந்தேகமடைந்த அவர்கள் அவற்றை இறக்கி வைத்து சோதனை செய்தனர். சோதனையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வெள்ளை நிற சாக்கு பைகளில் 450 கிலோ சந்தனமரங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சந்தன மர கட்டைகள் இருந்த மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். சந்தன மரங்களை மறைத்து கடத்தி வந்த கேரளா மாநிலம் காசர்கோடு, வித்யா நகர் பகுதியை சேர்ந்த ஜைனுலாபுதின் (45), காசர்கோடு, ஹிதாயத் நகரை சேர்ந்த அப்துல் ரசாக் (50) ஆகியோரை பிடித்து சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் சந்தன மரங்கள் வெட்டப்பட்ட பகுதி குறித்து விசாரணை நடந்தது. இருவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூரை சேர்ந்தவர்கள்தான் சந்தன மரங்களை வெட்டி கொடுத்து இருக்கலாம் என தெரிகிறது. எனவே அவர்கள் யார்? என்பது குறித்தும், கேரளாவில் சந்தன கட்டைகளை யாரிடம் விற்பனை செய்ய இருந்தனர்? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் பாப்பாரப்பட்டியில் அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன மரக்கடத்தல் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. 20 ஆண்டுகளில் சந்தன மரங்கள் ஓரளவு வளர்ந்துள்ளதால் தற்போது மீண்டும் சந்தன மர கடத்தல் தொடங்கி உள்ளது. கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிடிபட்டு இருப்பதால், ஏற்கனவே வீரப்பனிடம் சந்தன மரங்களை வாங்கிய கும்பல்தான் மீண்டும் சந்தன மர கடத்தலை தொடங்கி உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.