கோபியில் சூறாவளியுடன் கனமழை; 3 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
கோபி: கோபி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதை சுற்றியுள்ள கரட்டூர், குள்ளம்பாளையம், பொலவக்காளிபாளையம், நாதி பாளையம், வடுகபாளையம், நாகதேவன்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறாவளியுடன் கனமழை பெய்தது. கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் 200 ஏக்கரில் விவசாயிகள் செவ்வாழை, கதளி, பூவன் உள்ளிட்ட உயர் ரக வாழை மரங்களை பயிரிட்டிருந்தனர். இந்த வாழை மரங்கள் முழுவதும் 10 நாட்களுக்குள் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் செவ்வாழை, கதளி, பூவன் உள்ளிட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது.ஒரு வாழைக்கு சுமார் 300 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.அதேபோன்று முறிந்து விழுந்த வாழை மரங்களை அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகும் என்ற நிலையில் கடன் பெற்று பயிர் செய்துள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். முறிந்து விழுந்த வாழை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.