கோவாவில் உலக கோப்பை செஸ் இன்று தொடக்கம்: காரைக்குடி அங்கன்வாடி பெண் ஊழியரின் மகன் போட்டி; இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட 24 வீரர்கள் பங்கேற்பு
கோவா: கோவாவில் உலக கோப்பை செஸ் இன்று தொடங்குகிறது. இதில், இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் காரைக்குடி சேர்ந்த அங்கன்வாடி பெண் ஊழியரின் மகன் உட்பட 24 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
உலகக்கோப்பை செஸ் போட்டி 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடந்து வருகிறது.13-வது உலக்கோப்பை செஸ் போட்டி இந்தியாவின் கோவாவில் இன்று தொடங்கி நவ.26ம் தேதி வரை நடக்க உள்ளது. 23 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக செஸ் போட்டி நடைபெற உள்ளது. கடைசியாக 2002ம் ஆண்டு முன் ஐதராபாத்தில் நடந்தது.
கோவாவில் இன்று தொடங்கும் உலகக்கோப்பை போட்டியில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச வீரர்கள் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், நெதர்லாந்தின் அனிஷ்கிரி, அமெரிக்காவின் வெஸ்லி சோ, லெவோன் ஆரோனியன், சீனாவின் வெய் யி பங்கேற்கிறார்கள். இந்தியாவில் இருந்து உலக செஸ் சாம்பியன் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா உட்பட 24 முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் வைல்டு கார்டு என்ட்ரியாக பெண்கள் உலகக்கோப்பை செஸ் 2025ல் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக் பங்கேற்க உள்ளார். இவர்தான் திறந்த பிரிவில் உள்ள ஒரே பெண்ணும் ஆவர். இதுவரை இல்லாத வகையில் உலகக்கோப்பை தொடருக்கு அதிக எண்ணிக்கையில் இந்தியா சார்பில் வீரர்கள் பங்கேற்றுது உள்ளது குறிப்பிடத்தக்கது.
குகேஷ் தலைமையில் 24 பேர் கொண்ட இந்திய அணியில் கிராண்ட் மாஸ்டர் பிராணேஷ் (18) இடம்பெற்றுள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடியில் பிறந்தவர். இவரது தாய் அங்குள்ள அங்கன்வாடி யில் பணியாற்றி வருகிறார். தந்தை ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறார். தற்போது, பிராணேஷ் சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் தனது 5 வயதில் செஸ் விளையாட தொடங்கினார். 11 வயதில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடத்தை பிடிக்க போராடினார். 2020ல் சர்வதேச மாஸ்டராக உருவெடுத்தார். தொடர்ந்து, 2023ல் இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டரானார் பிராணேஷ். சமீபத்தில் சென்னையில் நடந்த சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டியில் சேலஞ்சர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
* ரூ.17.66 கோடி பரிசு
உலகக்கோப்பை செஸ் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.17.66 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு ரூ.1.05 கோடியாகும். 2வது இடத்துக்கு ரூ.75 லட்சம். இந்த தொடரில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் 2026 போரே கேண்டிடேடஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
* நடப்பு சாம்பியன்
கார்ல்சன் ஆப்சென்ட்
கடைசியாக 2023ம் ஆண்டு அஜர்பைஜானில் உலகக்கோப்பை செஸ் போட்டி நடந்தது. இதில், நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது, உலகின் நம்பர் 1 வீரராக உள்ள கார்ல்சன் இந்த முறை உலகக்கோப்பை செஸ் தொடரில் பங்கேற்கவில்லை.
* நாளை முதல் சுற்று போட்டி
8 சுற்றுகளை கொண்ட உலகக்கோப்பை செஸ் போட்டி நாக் அவுட் முறையில் நடைபெறும். ஒரு சுற்றில் 2 கிளாசிக்கல் கேம்களும் (2 நாட்கள்), தேவைப்பட்டால் 3வது நாளில் டை பிரேக்கரும் நடைபெறும். இன்று தொடக்க விழா நடக்கிறது. நாளை முதல் சுற்று போட்டி தொடங்குகிறது. இதில் 156 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். 50 வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு விளையாட உள்ளனர். மொத்தம் 5 சுற்றுகள் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் காலிறுதிக்கு தகுதி பெறுவர்.
