கோவாவில் இன்று விழா 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் மோடி
பனாஜி: இந்தியாவிலேயே மிகவும் உயரமான 77 அடி உயர ராமரின் வெண்கல சிலையை கோவாவில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கோவாவில் உள்ள கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று திறந்து வைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பூஜைகள் நேற்று காலை ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 3.45 மணி அளவில் பிரதமர் மோடி, 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் வருகைக்காக மடத்தின் வளாகத்தில் ஒரு சிறப்பு ஹெலிபேட் கட்டப்பட்டுள்ளது.
குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ஸ்ரீ ராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்று கோவா பொதுப்பணித் துறை அமைச்சர் திகம்பர் காமத் தெரிவித்தார். பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கும் ராமர் சிலை தான் உலகின் மிக உயரமான ஸ்ரீ ராமரின் சிலையாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார். விழாவில்கோவா ஆளுநர் அசோக் கஜபதி ராஜு, முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் ஒன்றிய அமைச்சர் பத் நாயக் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.