சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் ஜி.கே. மணியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ராமதாஸ்
திண்டிவனம்: சென்னை வானகரம் தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவரும் கவுரவ தலைவர் ஜி.கே.மணியை தனது மூத்த மகள் காந்தியுடன் சென்று நலம் விசாரித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே 7 மாதங்களை கடந்த நிலையிலும் அதிகார மோதல் நீடித்து வருகிறது. செயல் தலைவர் பதவியை ஏற்க மறுத்து தனி அணியாக செயல்பட்டு வரும் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு தனது மூத்த மகள் காந்தியை நியமிக்க அந்த பதவியில் நியமிக்க ராமதாஸ் காய் நகர்த்தி வருகிறார்.
இதன் முன்ேனாட்டமாக தான் மாநில தலைமை நிர்வாக குழு உறுப்பினராக காந்தியை நியமித்தார். அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு விதித்த காலக்கெடு நாளை (30ம்தேதி) முடிவடையும் நிலையில், இதுவரை அன்புமணி தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. காலக்கெடு முடிந்ததும் அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிவிட்டு காந்தியை செயல் தலைவராக்கும் நடவடிக்கையில் ராமதாஸ் இறங்குவார் என தெரிகிறது. இதனிடையே நேற்று (28ம்தேதி) செய்தியாளர்கள் சந்திப்பை ரத்துவிட்டு தனது மூத்த மகள் காந்தியுடன் ராமதாஸ் சென்னை சென்றார்.
இளைய மகள் கவிதா வீட்டில் தங்கிய அவர் நேற்று மாலை காந்தியுடன் வானகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இன்று மாலை அவர் தைலாபுரம் திரும்புவார் என தெரிகிறது.