ஜி.கே.மணிக்கு பேச வாய்ப்பு கொடுத்ததால் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தகவல் கோரல் அடிப்படையில் கரூர் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே. மணி (பா.ம.க.), நயினார் நாகேந்திரன் (பாஜ), பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்), நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), பூமிநாதன் (மதிமுக), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை) ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோர் பேசினர்.
அனைவரும் பேசி முடித்த நிலையில், அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஷ்வரன் ஆகியோர் தங்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்றனர். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், ‘பாமக சார்பில் ஜி.கே.மணி பேசி விட்டார். அவையை பொறுத்தவரையில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் சபாநாயகரிடம் கொடுத்த கடிதம் குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார். இதை தொடர்ந்து அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.