இந்திய வம்சாவளியாக இருந்து கொண்டு காதலிக்காக அரசு விமானத்தை பயன்படுத்திய எப்பிஐ தலைவர்: அமெரிக்காவில் வெடித்தது பெரும் சர்ச்சை
வாஷிங்டன்: அமெரிக்க புலனாய்வுத் துறை (எஃப்பிஐ) தலைவர், தனது காதலியைச் சந்திப்பதற்காக அரசு விமானத்தைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத் துறையின் (எஃப்பிஐ) தற்போதைய தலைவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல், கடந்த 2023ம் ஆண்டு, அப்போதைய எஃப்பிஐ தலைவர் கிறிஸ்டோபர் வ்ரே தனது தனிப்பட்ட பயணங்களுக்கு அரசு விமானத்தைப் பயன்படுத்தியதை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், தற்போது காஷ் படேலே அதேபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசு நிர்வாக முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஊதியமின்றி தவித்து வரும் சூழலில், காஷ் படேல் தனது காதலியின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எஃப்பிஐ-யின் அதிகாரப்பூர்வ சொகுசு விமானத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்னாள் எஃப்பிஐ அதிகாரியான கைல் செராஃபின் என்பவர் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த 25ம் தேதி, எஃப்பிஐ-க்கு சொந்தமான 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமானம், வடக்கு வெர்ஜீனியாவிலிருந்து பென்சில்வேனியா பறந்துள்ளது. அங்குள்ள பல்கலைக்கழக மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றில் காஷ் படேலின் காதலியான அலெக்சிஸ் வில்கின்ஸ் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த மூன்று மணி நேரத்திற்குள், அந்த விமானம் காதலி வசிக்கும் நாஷ்வில் நகருக்குப் பறந்துள்ளது. மறுநாள், காஷ் படேலுடன் எஃப்பிஐ முத்திரை பதித்த உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வில்கின்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சாதாரண எஃப்பிஐ ஊழியர்கள் தங்கள் வரிகளை எப்படிச் செலுத்துவது என்று கவலைப்படும்போது, நமது வரிப்பணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள எஃப்பிஐ, ‘இயக்குநர் தனது பயணங்களுக்கு நிறுவனத்தின் விமானங்களைப் பயன்படுத்தும்போது எந்த விதிகளையும் மீறுவதில்லை. மேலும் தனிப்பட்ட பயணங்களுக்கான கட்டணத்தை அவர் முன்கூட்டியே செலுத்திவிடுகிறார்’ என்று விளக்கம் அளித்துள்ளது.
