சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு சாகும் வரை சிறை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர்அரவிந்த்(20). இவர் கடந்த 7.3.2020ல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பியுள்ளார். இதனால் சிறுமி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அப்போது, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது தெரியவந்தது. பெற்றோர் புகாரின்படி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் அரவிந்தை போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா விசாரித்து, அரவிந்துக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பளித்தார்.