சிறுமிக்கு சூடு வைத்த கொடூர தாய், அத்தை அதிரடி கைது
கடலூர்: 8 வயது சிறுமிக்கு தொடையில் சூடு வைத்து கொடுமை செய்த அவரது தாய் மற்றும் அத்தையை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி மனைவி மணிமேகலை (33) இவரது கணவர் ஜோதி கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். இவள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி, அவரது தாய் மணிமேகலை மற்றும் அவரது அத்தை அனிதா (30) ஆகியோர் ஒன்றாக வசித்து வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சிறுமியின் தாய் மணிமேகலை, அத்தை அனிதா ஆகியோர் சிறுமியின் இரண்டு தொடையில் சூடு வைத்தும், அடித்தும் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை மணிமேகலையின் தாயார் வள்ளியம்மை சென்று கேட்டதற்கு நாங்கள் அப்படித்தான் செய்வோம், உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என கூறியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, கடலூர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு மேற்பார்வையாளர் காளிதாசன் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு சூடு வைத்த தாய் மணிமேகலை, சிறுமியின் அத்தை அனிதா ஆகியோரை கைது செய்தனர்.