பெண் குழந்தைகளை பெற்றதால் நடந்த கொடுமை; பாஜக எம்பியின் சகோதரி மீது தாக்குதல்
காஸ்கஞ்ச்: உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் முகேஷ் ராஜ்புத்தின் சகோதரி ரீனா ராஜ்புத் என்பவருக்கும், காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திருமணமாகி சில காலங்களிலேயே மாமனார் மற்றும் கொழுந்தனாரால் ரீனா ராஜ்புத் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளார்.
இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றதால், இவருக்குக் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த குடும்பப் பிரச்னை நீண்டகாலமாக நீடித்து வந்த நிலையில், தற்போது விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் ரீனா ராஜ்புத் குளித்துக்கொண்டிருந்தபோது, அவரது மாமனாரும், கொழுந்தனாரும் அதனை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவர்களைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், அவரை நடுரோட்டிற்கு இழுத்துவந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
மாமனார் கட்டையாலும், கொழுந்தனார் இரும்புக் கம்பியாலும் தாக்கியதில் ரீனா ராஜ்புத் பலத்த காயமடைந்தார். இந்தத் தாக்குதல் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரீனா ராஜ்புத் அளித்த புகாரின் பேரில், மாமனார், கொழுந்தனார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.