கொடையில் ஓவர் குளிர் நடுநடுங்கிய மாணவிகள் 12 பேர் திடீர் அட்மிட்
கொடைக்கானல்: கொடைக்கானலில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் அதிகளவில் இருக்கும். குறிப்பாக டிசம்பர் மாதத்தில் உறைபனி அளவிற்கு குளிர் நிலவும். இந்நிலையில் கொடைக்கானலில் நிலவும் குளிர் பற்றி தெரியாமல் ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போதிய கம்பளி ஆடைகள் இல்லாமல் நேற்று முன்தினம் சுற்றுலா வந்துள்ளனர். நள்ளிரவு செல்ல, செல்ல குளிர் அதிகமாகியதால் கல்லூரி மாணவிகள் 9 பேர் மற்றும் இவர்கள் உடன் வந்த 3 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுங்கி போய் உள்ளனர். இதையடுத்து அனைவரும் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அவர்களை பரிசோதித்த பின், மருத்துவமனையில் இருந்த ஹீட்டரை இயக்கி அனைவருக்கும் உடல் சூடு ஏற்றப்பட்டது. தொடர்ந்து உடல் சூடு ஏறியதும் அனைவருக்கும் நடுங்கும் சூழல் மாறி உடல்நலம் சீரானது. அதன்பின் அனைவரும் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கொடைக்கானலுக்கு தற்போது வரும் சுற்றுலாப்பயணிகள் கம்பளி ஆடைகள், ஸ்வெட்டர்கள், ஜெர்க்கின்கள் உள்ளிட்டவைகளை தங்களுடன் கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.