கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த 21 அடி நீளமுள்ள ராட்சத அரிவாள் தயாரிப்பு: திருப்புவனம் பட்டறையில் ரெடி
திருப்புவனம்: மதுரை அழகர்கோவில் கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடன் செல்லுத்துவதற்காக திருப்புவனம் பட்டறையில் 21 அடி மற்றும் 18 அடி நீளமுள்ள ராட்சத அரிவாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய ஊர்களில் அரிவாள் தயாரிப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இதில், திருப்பாச்சேத்தி அரிவாள் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் அரிவாள் எடை குறைவாகவும், கூர்மையாகவும் இருப்பதால் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் பலர் வந்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் வீச்சரிவாள் மிகவும் பிரசித்தி பெற்றது.
போலீஸ் கெடுபிடியால் வீச்சரிவாள் தயாரிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது, செடி, கொடிகளை வெட்டுவதற்கும், விவசாயப் பணிக்கும் அரிவாள்கள், கத்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த ராட்சத அரிவாள்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திருப்புவனம் அருகே மாரநாடு கருப்புசாமி, சோணைசாமி, மதுரை அழகர்கோவில் 18ம் படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப அரிவாள்களை ஆர்டர் செய்கின்றனர். இதற்காக ஒரு அடி முதல் 21 அடி நீளம் வரை அரிவாள்கள் தயாரிக்கப்படுகின்றன.
திருப்புவனத்தில் தற்போது 12 அரிவாள் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கார்த்தி லெட்சுமணன் என்பவருக்கு சொந்தமான பட்டறையில் தலா 200 கிலோ எடையுடன் 21 அடி நீளமுள்ள 2 அரிவாள்களும், 18 அடி நீளமுள்ள ஒரு அரிவாளும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சதீஷ் என்பவரது பட்டறையில் 18 அடி நீளமுள்ள அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்டறை உரிமையாளர்கள் கூறுகையில், `ஆடி மாத வழிபாட்டிற்காக அழகர்கோவில் 18ம் படி கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்த மலேசியா, மதுரை, தஞ்சையை சேர்ந்த பக்தர்கள் கொடுத்த ஆர்டரின்பேரில் ராட்சத அரிவாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஒரு அடிக்கு ரூ.1,500 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலாவதியான கனரக வாகனங்களின் இரும்பு பட்டைகளை வாங்கி வந்து நெருப்பில் உருக்கி அரிவாள் தயாரிக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.