ஐரோப்பாவை அச்சுறுத்தும் மர்ம டிரோன்கள்; ஜெர்மனி விமான நிலையம் திடீர் மூடல்: ஆயிரக்கணக்கான பயணிகள் நள்ளிரவில் தவிப்பு
மூனிச்: ஜெர்மனியின் மூனிச் விமான நிலைய வான்பரப்பில் மர்ம டிரோன்கள் பறந்ததால், விமானப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக விமான நிலையங்களின் வான்பரப்பில் மர்ம டிரோன்கள் பறப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டென்மார்க் மற்றும் நார்வே விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் ரஷ்யாவின் மறைமுகப் போர் தந்திரமாக இருக்கலாம் என சில ஐரோப்பிய தலைவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த தொடர் சம்பவங்களை எதிர்கொள்ள ‘டிரோன் தடுப்புச் சுவர்’ ஒன்றை அமைப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மூனிச் நகரில் அக்டோபர்ஃபெஸ்ட் திருவிழாவுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மற்றும் குடியிருப்புப் பகுதியில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தால் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில், ஜெர்மனியின் மூனிச் விமான நிலையத்தில் நேற்று இரவு 10.18 மணியளவில் வான்பரப்பில் மர்ம டிரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு உடனடியாக விமான சேவைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, பின்னர் முழுமையாக முடக்கியது. இதனால், புறப்படத் தயாராக இருந்த 17 விமானங்கள் தரையிலேயே நிறுத்தப்பட்டன. தரையிறங்க வேண்டிய 15 விமானங்கள், ஸ்டட்கர்ட், நியூரம்பெர்க், வியன்னா உள்ளிட்ட பிற நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
இந்த திடீர் முடக்கத்தால் சுமார் 3,000 பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர். அவர்களுக்கு விமான நிலைய நிர்வாகம் சார்பில் தற்காலிக படுக்கைகள், போர்வைகள், உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன. வான்வெளி பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்த டிரோன்களை இயக்கியது யார் என்பது குறித்து ஜெர்மனி அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.