கெங்கவல்லியில் மீட்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனம் விபத்தில் சிக்கியது
*டிராக்டர் மீது மோதியது- 7 பேர் காயம்
* டிரைவர் போதையில் ஓட்டியதால் விபரீதம்
கெங்கவல்லி : கெங்கவல்லியில், மீட்பு பணிக்காக சென்ற தீயணைப்பு வாகனம், டிராக்டர் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில், நிலைய அலுவலர் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் நடுவலூர்-புங்கவாடி சாலையில் தீயணைப்பு நிலைய அலுவலகம் செயல் பட்டு வருகிறது. நேற்று மதியம் 2.30 மணியளவில், தம்மம்பட்டி பேரூராட்சி உடையார்பாளையத்தில் மலைப்பாம்பை பிடிக்க உதவி கேட்டு அழைப்பு வந்தது. இதன்பேரில், நிலைய அலுவலர்(பொ) வெங்கடேசன்(51) தலைமையில் வீரர்கள் ராஜா, சதீஷ்குமார், ரமேஷ், வசந்த், பாலகிருஷ்ணன் மற்றும் டிரைவர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர், தீயணைப்பு மீட்பு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்திற்கு புறப்பட்டனர்.
கூடமலை அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் சென்றபோது, நடுவலூரில் இருந்து ஜல்லி-மணல் ஏற்றிச் சென்ற டிராக்டரை, தீயணைப்பு வாகனம் முந்திச் செல்ல முயன்றது. அப்போது, எதிரே வந்த 2 இரண்டு பைக்குகள் மீது மோதாமல் இருப்பதற்காக, தீயணைப்பு வாகனத்தை டிரைவர் சுபாஷ் சந்திரபோஸ் சற்று வளைத்தார். ஆனால், திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், டிராக்டரை இடித்து தள்ளியது. பின்னர், அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் பாய்ந்தது. அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது மோதும் அபாயம் ஏற்பட்டதால், நிலைய அலுவலர்(பொ) மற்றும் வீரர்கள் உயிர் தப்பிக்கக ஒருவர் பின் ஒருவராக கீழே குதித்தனர்.
தீயணைப்பு வாகனம் மோதியதில், டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து அப்பளம்போல் நொறுங்கியது. அதனை ஓட்டி வந்த நடுவலூரைச் சேர்ந்த பெரியசாமி மகன் செங்கோட்டுவேல் என்பவர் படுகாயமடைந்தார். மேலும், தீயணைப்பு வாகனத்தின் முன்பகுதியும் உருக்குலைந்தது. நிலைய அலுவலர்(பொ) வெங்கடேசனுக்கு வலது கால், கைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. வீரர்களான செந்தாரப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் பாலகிருஷ்ணன்(36) என்பவருக்கு இடது கால் முறிந்தது.
மற்ற வீரர்கள் ராஜா, சதீஷ்குமார், ரமேஷ், வசந்த் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் சிக்கி காயமடைந்த 7 பேரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், சுபாஷ் சந்திரபோஸ் மது குடித்து விட்டு தீயணைப்பு வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது. கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.