பொது சிவில் சட்டத்தின் கீழ் லிவ் இன் உறவுகள் பதிவு விதியில் முக்கிய திருத்தம்: உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்
நைனிடால்: நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவுகளில் இருக்கும் தம்பதிகள் உள்ளூர் காவல் துறையிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும், தவறினால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், லிவ் இன் உறவுகளை பதிவு செய்வதில் பல்வேறு முக்கிய திருத்தங்கள் செய்யப்படுவதாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், லிவ் இன் உறவுகளை பதிவு செய்ய முடியாத நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தம்பதியரில் ஒருவர் மைனர் என்றாலோ, தடை செய்யப்பட்ட உறவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலோ, ஒருவர் அல்லது இருவரும் ஏற்கனவே திருமணமானவராக இருந்தாலோ அல்லது மற்றொரு குடும்ப உறவில் இருந்தாலோ பதிவு செய்ய முடியாது. ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையும் தளர்த்தப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் 30 நாளில் இருந்து 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.