காசாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு: பத்திரிகையாளர்கள் 6 பேர் பலி
ஜெருசலேம்: காசாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே,பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்றுமுன்தினம் குண்டுவீசியது. இதில், அல் ஜசீரா நிருபர்கள் அனாஸ் அல்-ஷெரீப் (28) மற்றும் முகமது குரேகா உட்பட பத்திரிகையாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கூட,அல்-ஷெரீப், காசா மீது இஸ்ரேல் தீவிர குண்டுமழை பொழிந்து வருவதாகப் பதிவு செய்திருந்தார்.
இந்த படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ள அல் ஜசீரா நிறுவனம், ‘இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான, திட்டமிட்ட தாக்குதல். உண்மையை வெளிப்படுத்தும் குரல்களை நசுக்கும் முயற்சியாகும்’ என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், அனாஸ் அல்-ஷெரீப் ஹமாஸ் அமைப்பின் ஒரு பிரிவிற்குத் தலைமை தாங்கியதாகவும், அதற்கான மறுக்க முடியாத ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.ஷிபா மருத்துவமனை இயக்குனர் ரமி முகன்னா கூறுகையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் உட்பட 8 பேர் பலியாகினர் என்றார்.