இஸ்ரேல் ஏவுகணை வீச்சால் காசா பலி எண்ணிக்கை 58,000ஐ கடந்தது
காசா: கடந்த 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ராணுவம், காசா மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 58,026-ஐ கடந்துள்ளது. மேலும் 1,38,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த போரில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களும், குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போர் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் பட்டினியால், நிவாரணப் பொருட்களைப் பெற நீண்ட தூரம் பயணம் செய்து வரிசையில் காத்திருக்கும் மக்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் முதல், இவ்வாறு நிவாரண உதவிக்காக காத்திருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 805 பேர் கொல்லப்பட்டு, 5,250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நடந்த தாக்குதல்களில் மட்டும் சுமார் 100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகர சந்தை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் மருத்துவ ஆலோசகர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். உச்சக்கட்டமாக, நுசெரத் அகதிகள் முகாமில் குடிநீருக்காக வரிசையில் காத்திருந்த அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்,
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம், தாங்கள் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்ததாகவும், ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை பாதை மாறிச் சென்று மக்கள் மீது விழுந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.