காசா போர் நிறுத்தம் பற்றி விவாதித்தபோது கத்தாரில் புகுந்து இஸ்ரேல் குண்டுவீச்சு: ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து அதிரடி
துபாய்: காசாவில் போர் நிறுத்தம் பற்றி கத்தாரில் கூட்டம் நடத்திய போது ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு போர் நிறுத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. இதில் ஹமாஸ் குழுவினர் கலந்து கொண்டனர். அமெரிக்கா ஆலோசனை அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது திடீரென பேச்சுவார்த்தை நடந்த கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் அதிரடியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இதனால் கத்தார் தலைநகர் தோஹாவில் பெரும் கருப்பு புகை எழுந்தது. அங்குள்ள அதிகாரிகள் தாக்குதலை ஒப்புக்கொண்டனர். தாக்குதலில் யாராவது காயமடைந்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்த தாக்குதலை கத்தார் கண்டித்துள்ளது. இது ஒரு கோழைத்தனமான இஸ்ரேலின் தாக்குதல் என்று தெரிவித்த கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி இதை அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அப்பட்டமான மீறல்.
இந்த பொறுப்பற்ற இஸ்ரேலிய நடத்தையையும், பிராந்திய பாதுகாப்பின் தொடர்ச்சியான சீர்குலைவையும், அல்லது அதன் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு செயலையும் பொறுத்துக்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்துகிறது’ என்று கூறினார். இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் தாக்குதலுக்கு பதிலடி: ஜெருசலேமில் நேற்று முன்தினம் 6 இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக கத்தார் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
* இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட கலீல் அல்-ஹய்யா யார்?
தோஹாவில் இஸ்ரேலின் தாக்குதலின் முக்கிய இலக்காக ஹமாஸின் மூத்த அதிகாரி கலீல் அல்-ஹய்யா இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அல்-ஹய்யா யார், ஹமாஸுக்குள் அவர் என்ன பங்கு வகிக்கிறார் என்பது தெரியவில்லை. கடந்த ஆண்டு ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே மற்றும் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அல்-ஹய்யா பாலஸ்தீன குழுவில் அதிக பங்கை வகித்துள்ளார். போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட்டு தோஹாவில் காசா விவகாரங்களுக்கான தலைவராக செயல்பட்டார்.
அவர் 1960ல் காசாவில் பிறந்தார். 1987 இல் குழு முதன்முதலில் ஒன்றிணைந்ததிலிருந்து ஹமாஸின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இஸ்ரேலிய தாக்குதல்களில் அவரது மகன் உட்பட பல குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார். இதையடுத்து பல ஆண்டுகளுக்கு முன்பு காசாவை விட்டு வெளியேறிய அவர் தோஹாவில் வசித்து வருகிறார். வெளிநாடுகளில் ஹமாஸின் மிகவும் செல்வாக்கு மிக்க உறுப்பினர்களில் ஒருவராகவும், அரபு மற்றும் இஸ்லாமிய உலகின் பிற பகுதிகளுடனான தொடர்புகளுக்கு ஒரு முக்கிய நபராகவும் உள்ளார்.