காசா மீதான தாக்குதலுக்கு இந்தியா உதவி: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
நாகை: நாகையில் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு அளித்திருப்பதாக கூறியுள்ளார். சிறிய அளவிலான வரி குறைப்புக்கு ஒன்றிய அரசு இவ்வளவு தம்பட்டம் அடிக்க வேண்டியது இல்லை.
கடந்த 11 ஆண்டுகளாக வரி உயர்வு வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் மக்களவை, மாநிலங்களவையில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பிரதமர் செவிசாய்க்கவில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் ஜிஎஸ்டி வரியின் மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.22 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அப்படியானால் கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் பணம் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது.
அதற்கு யார் பொறுப்பேற்பது? பிரதமருக்கு நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமென்றால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். காசா மீதான இஸ்ரேல் இனவெறி தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசு மறைமுகமாக இஸ்ரேலுக்கு உதவி வருகிறது. காசா மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இது மனிதாபிமானமற்ற செயல். எனவே இஸ்ரேலுக்கு உடனடியாக வெடிபொருள்கள் அனுப்புவதை இந்தியா நிறுத்த வேண்டும். விஜய் அரசியலுக்கு வருவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் தவெக கொள்கை என்ன, ஆணவ படுகொலைகள், ஜாதிய தாக்குதல்கள் ஆகியவற்றில் தவெக நிலைப்பாடு என்ன என்பதை விஜய் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இதையெல்லாம் கூறாமல் திமுக ஆட்சியை மட்டுமே விமர்சிக்கும் விஜய், பாஜ அரசை ஏன் விமர்சனம் செய்யவில்லை. தமிழகத்துக்கு நிதி மறுப்பது, திட்டங்களை கிடப்பில் போடுவது இவற்றுக்கு எதிராக விஜய் எப்போது குரல் கொடுத்தார். பாஜ குறித்து விஜய் மவுனம் சாதிப்பது ஏன்? இவ்வாறு கூறினார்.