காஸாவிலிருந்து தெற்குப்பகுதியை நோக்கி வெளியேறும் மக்கள்: சாலையை மூடப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பால் அச்சம்
காசா: காசா மக்களுக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஒருசேர குரல்கொடுத்து வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இப்பரிந்துரையில், போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் பிணைக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
அதேநேரத்தில், காஸாவில் மறுகட்டமைப்புக்கு உறுதியளிக்கும் இந்தப் பரிந்துரை, பாலஸ்தீன அரசமைப்பிற்கு எந்தப் பாதையையும் அமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அமைதித் திட்ட பரிந்துரைகளுக்கு ஹமாஸ் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி பதிலளிக்கவில்லை என்றால் முடிவு மிக மோசமானதாக இருக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், காஸா நகரில் எஞ்சியுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இதுவே கடைசி வாய்ப்பு என்றும், வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார். இதை அடுத்து தெற்கு பகுதிக்கு செல்லும் சாலை விரைவில் மூடப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதை தொடர்ந்து மக்கள் கையில் கிடைத்த உடமைகளுடன் தெற்கு பகுதியை நோக்கி விரைகின்றன. தெற்கு பகுதியில் அடிப்படை வசதி இல்லாத கூடாரங்களில் அவர்கள் தங்கி இருந்தனர். இதற்கிடையே, காஸாவை நோக்கி மனிதாபிமானஅடிப்படையில் நிவாரணப் பொருட்களுடன் வரும் படகுகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகிறது.