காசா அமைதி மாநாட்டில் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க பாக். பரிந்துரை: வாயடைத்து நின்ற இத்தாலி பெண் பிரதமர்
ஷார்ம் எல்-ஷேக்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரைத்ததால், இத்தாலி பிரதமர் அதிர்ச்சியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் தொடர்பான மற்றொரு சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் முயற்சியால் ஏற்பட்ட காசா போர் நிறுத்தத்தை முறைப்படுத்தவும், போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்புப் பணிகள் குறித்தும் விவாதிப்பதற்காக எகிப்தில் காசா அமைதி மாநாடு நடைபெற்றது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் அல்-தானி ஆகியோரும் கையெழுத்திட்டனர். இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடன் நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பேசுமாறு அழைத்தார்.
அப்போது பேசிய ஷெபாஸ் ஷெரீப், ‘காசாவில் அமைதியை ஏற்படுத்தியதும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படவிருந்த அணு ஆயுதப் போரைத் தடுத்ததும் டிரம்ப்தான்’ என்று கூறியதுடன், ‘டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் மீண்டும் பரிந்துரைக்கிறது’ என்று அறிவித்தார். ஷெபாஸ் ஷெரீப் இதை அறிவித்தபோது, அதிர்ச்சியடைந்த இத்தாலி பிரதமர் மெலோனி, தனது வாயைப் பொத்திக்கொண்டார். அவரது இந்த நம்பமுடியாத முகபாவனை தொடர்பான காணொலி, சமூக வலைதளங்களில் உடனடியாகப் பரவி வைரலானது.