கேட் நுழைவுத்தேர்வுக்கு வரும் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். 2026ம் ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் பிப்ரவரி 7, 8 மற்றும் 14, 15ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது.
இந்த முறை கேட் தேர்வை கவுகாத்தி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தொடங்குகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று செப்டம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முடிவுகள் மார்ச் 19ல் வெளியிடப்படும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத் தளத்தில் சென்று பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.