வணிக சிலிண்டர் விலை ரூ.10.50 காசுகள் குறைந்து ரூ.1,739.50க்கு விற்பனை : வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!!
சேலம் : வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 காசுகள் குறைந்து, ஒரு சிலிண்டர் ரூ.1,739.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இதனிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.
இதன்படி, டிசம்பர் மாதத்திற்கான புதிய விலை பட்டியலை இன்று காலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதன்படி தொடர்ந்து 8வது மாதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே, அதாவது டெல்லியில் ரூ.853, மும்பையில் ரூ.852.50, கொல்கத்தாவில் ரூ.879, சென்னையில் ரூ.868.50, சேலத்தில் ரூ.886.50 என நீடிக்கிறது. அதேசமயம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை நவம்பர் மாதத்தைத் தொடர்ந்து டிசம்பரிலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.