தோட்டத்துக்காரர் ஆதரவு எம்எல்ஏக்கு பிடி கொடுக்காத இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘அறநிலையத்துறை இடத்தை குத்தகை விட்டதுல வருவாய் மடைமாறிப் போகுதுன்னு புகார்கள் எழுந்திருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் செங்கம் நகரத்துல முக்கிய பகுதியில முழு முதற்கடவுளுக்கு கோயில் அமைந்திருக்குது.. இந்த கோயிலை சுற்றியும் பல கோடி மதிப்பிலான காலியிடங்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமாக இருக்குதாம்.. செங்கம் நகரத்துல இந்த இடத்தையொட்டி இருக்குற தனியார் இடங்கள்ல கடை வைக்குறதுக்கு பல லட்சங்கள் அட்வான்ஸ் தொகை கொடுத்தால்தான் இடமே வாடகைக்கு கிடைக்குதாம்.. இப்படி இருக்கற நிலையில, கோயில் இடத்தை சொற்ப விலைக்கு துறை சார்ந்த அதிகாரிகள் குத்தகைக்கு விட்டிருக்காங்களாம்..
அந்த குத்தகையில அரசுக்கு ஒரு கணக்கு, அவங்களுக்கு ஒரு கணக்குன்னு போட்டு சம்திங் பார்த்துட்டாங்களாம்.. இதனால துறைக்கு வர வேண்டிய வருவாய் மடைமாறிபோகுது, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திட்டு ஒருசிலர் லாபம் பார்த்து வர்றாங்கணு விஷயம் தெரிஞ்சவங்க புகாராக சொல்றாங்க.. இதனால துறை சார்ந்த அதிகாரிங்க செங்கம் நகரத்துல அறநிலையத்துறையில நடக்குறது என்னவென்று விசாரணை செய்யணும்னு கோரிக்கைகள் எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவரை கோழி கூவுவதற்கு முன்பாக பார்க்க போகிறாராம் தோட்டத்துக்காரர் ஆதரவு எம்எல்ஏ..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தைலாபுர தோட்டத்துக்காரருக்கும், பனையூர் மகனுக்கும் இடையே நிரந்தரமான கோடு விழுந்தது உறுதியாகி விட்டதாம்.. மகனின் தலைவர் பதவியை பறித்த நிலையில் செயல் தலைவராக நியமித்தாராம்.. ஆனால் தலைவர் பதவியில் நான்தான் இருக்கிறேன்.. என்னை நீக்க யாராலும் முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டாராம் மகன்.. இன்று வருவார், நாளை வருவார் என எதிர்பார்த்த தோட்டத்துக்காரருக்கு ஏமாற்றம் தான் கிடைத்ததாம்.. அதோடு யாரும் எதிர்பாராத வகையில் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தியது, ஆஸ்பத்திரியில் இருக்கும் தந்தை ஐசியூவில் இருக்கிறார் என்றெல்லாம் கிளப்பி விட்டுட்டு போயிட்டாராம்.. நல்ல பிள்ளையாக இருந்திருந்தால் ஆஸ்பத்திரிக்கு வந்து நலம் விசாரித்தால் உடைந்துபோன உறவை ஒட்டிக்கொள்ளணும் என்ற எண்ணத்தில் இருந்தாராம் தோட்டத்துக்காரர்.. அதற்கு எதிராகவே நடந்துபோனதால் மகனை முழுமையாக ஒதுக்கிட்டாராம்.. அதே நேரத்தில் எப்படியாவது உடைந்துபோன இதயத்தை ஒட்டவைத்துவிடலாம் என மூத்த நிர்வாகிகள் தீவிர முயற்சியில ஈடுபட்டாங்களாம்.. சகோதரியை தூது அனுப்பி, இணைந்திடலாம் என அழைப்பு விடுத்திருக்காங்க.. ஆனால் உங்கள் வேலையை பாருங்கள்.. எனது வேலையை நான் பார்க்கிறேன் என நெத்தியில் அடித்தது போல சொல்லிட்டாராம்.. அதேபோல தந்தையும் இனிமேல் மகனை சேர்த்து கொள்வதாக திட்டம் இல்லை என்றதோடு, கட்சி தலைவர் பதவி என்னைவிட்டு போனால் என் சமூக மக்களுக்கு பாதுகாப்பே இருக்காது என வேதனையோடு சொன்னாராம்.. இப்படியாக இருதரப்பும் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்த நிலையில், மகளுக்கு செயல் தலைவர் கிரீடத்தை சூட்டினாராம் தோட்டத்துக்காரர்.. இதற்கிடையில் வரும் தேர்தலில் எப்படியாவது இலைக்கட்சியுடன் கூட்டணி வச்சிக்கிடணுமுன்னு தோட்டத்துக்காரரின் ஆதரவு எம்எல்ஏ ஒருவர் முயற்சியில ஈடுபட்டுக்கிட்டு இருக்காராம்.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ பிடி கொடுக்க மறுக்கிறாராம்.. இதற்காக நெடுஞ்சாலை நகரில் உள்ள இலைக்கட்சி தலைவரை கோழி கூவுவதற்கு முன்பதாக சென்று சாஷ்டாங்கமாக விழுந்து பார்க்கிறாராம்.. என்றாலும் நடிகரின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கிக்கிட்டிருக்கும் இலைக்கட்சி தலைவரோ ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லையாம்.. ஆனால் கட்சியே எங்களிடம் தான் இருக்குதுன்னு சொல்லும் மகன் தரப்பினர், தோட்டத்துக்காரர் புதிய கட்சியை தொடங்கிக்கொள்ள வேண்டும் எனவும் உறுதியாக சொல்றாங்க.. இதற்கிடையில் தோட்டத்துக்காரருக்கு எல்லாமுமாக இருக்கும் மாங்கனி எம்எல்ஏவை, சாக்கடைன்னு சொல்லிபுட்டாராம்.. அதற்கு அந்த எம்எல்ஏவும் பதில் கொடுத்துள்ள விவகாரம் பாட்டாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புது சென்டிமென்ட்டாக, ஊரின் பெயரை தனது பெயருக்கு முன்னால் சேர்க்கும் எண்ணத்திற்கு பலாப்பழக்காரர் சென்றுவிட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘எப்படியாவது இலைக்கட்சியோட ஒன்றிணைந்து விட வேண்டும் என்பதில் தான் இப்போதைக்கு பலாப்பழக்காரரின் கவனம் முழுவதும் உள்ளதாம்.. இதற்காக கோயில், பூஜை என ஊர் ஊரா சுற்றி வருகிறாராம்.. அந்த வரிசையில் புது சென்டிமென்ட்டாக, தற்போது தனது ஊர் பெயரை தனது பெயரின் முன்னால் சேர்க்க முடிவு செய்திருக்கிறாராம்.. இலைக்கட்சி தன் கைக்கு வந்தாலும் கூட சேலத்துக்காரருக்கு அவரது சொந்த ஊரின் பெயர் தான் அடையாளமாக மாறிவிட்டது. அவரது பெயரை விட, ஊரின் பெயர் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தந்துள்ளது.. இதனால், தனக்கும் ஊரின் பெயரை அடையாளமாக்கினால் என்ன என்ற எண்ணம் பலாப்பழக்காரருக்கு வந்துவிட்டதாம்.. என்னதான் தனது பெயரை மூன்றெழுத்தில் அடையாளமாக அழைத்தாலும், சேலத்துக்காரரை போன்ற அடையாளமும், தனித்துவமும் தனக்கு கிடைக்கவில்லையே என்பதில் பலாப்பழக்காரருக்கு சற்று வருத்தம் தானாம்.. இதனால், இனிவரும் காலங்களில் தன்னோட பெயருக்கு முன்னால் தனது தொகுதியான பிக்பாண்ட் நகரத்தின் பெயரை சேர்க்க வேண்டுமென அன்பு கட்டளையிட்டுள்ளாராம்.. இதனால், அவரை இனிமேல் பிக்பாண்ட் நகரின் பெயரை குறிப்பிட்டே அழைக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
