குப்பையை பறக்கவிடும் மாநகராட்சி வாகனங்கள்
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பையை மூடாமல் செல்வதால், அதன் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சேமிக்கும் குப்பையை லாரி, டிராக்டர் மூலமாக சேமித்து வெண்டிபாளையத்தில் உள்ள குப்பைக்கிடங்கிற்கும், வைரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நுண்ணுயிர் உரக்கிடங்கிற்கும் கொண்டு செல்லப்பட்டு, குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், குப்பையை கொண்டு செல்லும் மாநகராட்சி வாகனங்கள் முறைப்படி, குப்பையை மூடாமல் செல்வதால், குப்பை கிடங்கிற்கு செல்லும் சாலைகள் நெடுகிலும் குப்பைகள் சிதறிக்கிடக்கிறது.
இப்படி குப்பையை சிதறிவிட்டு செல்வதால், மாநகராட்சி வாகனங்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மேலே குப்பை சிதறி, அவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, சாலையில் செல்வோரின் கண்களில் தூசிகள்பட்டு வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வழியில் குப்பை விழுந்து சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை பாதுகாப்பாகவும், மூடி போட்டு காற்றில் பறக்காதவாறு கொண்டு செல்லவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.