இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்; மாணவியை சீரழித்து வீடியோ எடுத்த கும்பல்: நண்பர்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது
மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் கார்த்திக், அந்த மாணவியை வலச்சில் பகுதியில் உள்ள உணவகத்திற்கு மதிய உணவிற்காக அழைத்துள்ளார். உணவருந்திய பிறகு, அந்த மாணவியை அங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு கார்த்திக் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, அங்கு வந்த கார்த்திக்கின் நண்பரான ராகேஷ் சல்தானாவும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த கொடூரச் செயலை கார்த்திக் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பின்னர் அதனை மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், மங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கார்த்திக், ராகேஷ் சல்தானா மற்றும் அந்த வீடியோவைப் பரப்பிய குற்றத்திற்காக ஜீவன், சந்தீப், ரக்ஷித், சிரவன், சுரேஷ் ஆகிய ஐந்து பேர் என மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் 17 வயது சிறுமி என்பதால், போக்சோ மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மங்களூரு காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.