அருமனை அருகே நள்ளிரவில் ராணுவ வீரரின் வீட்டை சூறையாடிய கும்பல்
*தட்டிகேட்டவர்களை காரால் இடித்து தள்ளினர்
அருமனை : அருமனை அருகே இடைக்கோடு மாலைக்கோடு சுண்டக்காலவிளை பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மகன் ஷாஜி (35). ராணுவ வீரர். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். தாயாரும் இவருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கி உள்ளனர்.
நேற்று அதிகாலை 1 மணியளவில் திடீரென ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கும் சப்தம் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் எழுந்துள்ளனர். அப்போது 8க்கும் மேற்பட்டோர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை சேதப்படுத்தி, ஜன்னல்கள் மற்றும் இரும்பு கதவை உடைத்து உள்ளே புக முயன்றுள்ளனர். இதைக்கண்ட ஷாஜியின் தாயார் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் அந்த செல்போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போது சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் தாங்கள் வந்த 2 கார்களில் தப்பி செல்ல முயன்றது. அவர்களை பிடிக்க சிலர் முயன்றபோது அவர்களையும் தாக்கி காரால் மோதி ஓடையில் தள்ளி உள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றது.கும்பல் ஜன்னல் கணணாடிகளை உடைத்தபோது தெறித்த துண்டுகள் வீட்டில் இருந்த குழந்தைகளை காயப்படுத்தின. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் குறித்து ஷாஜி அருமனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி கும்பலின் இந்த அட்டூழியம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.