விநாயகர் சதுர்த்தியையொட்டி பொள்ளாச்சியில் பிரதிஷ்டை செய்ய சிலைகள் தயார்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், இந்து அமைப்பினரால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், நாளை மறுநாள் (27ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி, உலக நல வேள்விக்குழு உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும், பொது மக்கள் சார்பிலும் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இதில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 550க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் அனைத்தும், 28ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் தனித்தனியாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. இதில் இந்து அமைப்புகள் சார்பில், வெவ்வேறு நாட்களில் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால், இந்து அமைப்பினர் ஏற்கனவே ஆர்டர் கொடுத்த சிலைகளை வெளியிடங்களில் இருந்து கனரக வாகனங்களில் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், சுமார் 3 அடி முதல் 9 அடி வரையிலான சிலைகள் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தாலுகா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.