பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் 550 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
*பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவில் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 550க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, நகர் மற்றும் கிராமபுறங்களில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விநாயகர் சிலை எந்தெந்த இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது என ஏற்கனவே போலீசார் பட்டியலிட்டுள்ளனர்.
சிலை பிரதிஷ்டை செய்யும், இந்து அமைப்பினர்களுக்கு போலீசார் பல்வேறு விதிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர். பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாட்களில் இந்து அமைப்பு சார்பில் விசர்ஜன ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்படுகிறது.
பொள்ளாச்சி போலீஸ் சரகத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, தாலுகா, மகாலிங்கபுரம், வடக்கிபாளையம், நெகமம் மற்றும் கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்பட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சுமார் 250 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
அதுபோல், ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட உள்ள வால்பாறை சரகத்தில் ஆனைமலை, கோட்டூர், ஆழியார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சுமார் 300 சிலைகள் என, 550க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் கூறுகையில், ‘பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழா அசம்பாவிதம் இன்றி நடக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. வெவ்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நாட்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அம்பராம்பாளையம் ஆற்றில் கரைக்கப்படுகிறது. இதனால், சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் இடங்களில் போலீசார், ஊர்காவல் படையினர், போக்குவரத்து காவலர், அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி வருவாய்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்படுகின்றனர். மேலும், விசர்ஜன ஊர்வல பாதைகளிலும், பிரச்னைக்குறிய இடங்களிளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படுகிறது. இதில் பதற்றமான பகுதிகளாக கருதப்படும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு அதிகப்படுத்தப்படுகிறது’ என்றனர்.