காந்தி ஜெயந்தியன்று மதுபாட்டில் பதுக்கி விற்ற தவெக நிர்வாகி கைது
திண்டிவனம்: தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே திண்டிவனம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செஞ்சி பேருந்து நிறுத்தத்தின் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை விசாரித்தபோது, டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடியவரை துரத்திச் சென்று பிடித்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
இதில் அவர் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மணிகண்டன்(20) என்பதும் தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டிவனம் நகர நிர்வாகியாக உள்ளார் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.14,000 மதிப்பிலான 72 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மணிகண்டன் மீது வழக்கு பதிந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.