காந்தி ஜெயந்திக்கு முன் நடந்த அராஜகம்; லண்டனில் காந்தி சிலை அவமதிப்பு: ஒன்றிய அரசு கடும் கண்டனம்
லண்டன்: கடந்த 2020ம் ஆண்டு, இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் இருந்த காந்தி சிலை அவமதிக்கப்பட்டது. அதேபோல், கடந்த மார்ச் மாதம், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்திய மண்ணில் செயல்படும் இதுபோன்ற தீவிரவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், லண்டனில் உள்ள அவரது சிலை மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அமைதிப் பூங்கா எனப்படும் டேவிஸ்டாக் சதுக்கத்தில், தியான நிலையில் அமர்ந்திருக்கும் காந்தியின் வெண்கலச் சிலை அமைந்துள்ளது.
கடந்த 1968ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சிலையின் பீடத்தில், மர்ம நபர்கள் நேற்று சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதி அவமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து லண்டன் பெருநகரக் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த அவமதிப்புச் செயலுக்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்தியா முறைப்படி புகார் அளித்துள்ளதுடன், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை உடனடியாகச் சீரமைக்கவும் வலியுறுத்தியுள்ளது.