காந்தி நினைவு அருங்காட்சியகம்-மதுரை
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பொழுதுபோக்குக்காக மட்டும் சுற்றுலா அழைத்துச் செல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமான இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லத் திட்டமிடுங்கள். அது உங்கள் பிள்ளைகளுக்குள் மட்டு மல்ல உங்களுக்குள்ளும் சில பாடங்களை, சில சிந்தனைகளை உண்டாக்க உதவும். அந்த வகையில் மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கும் அழைத்து செல்லுங்கள்.
மதுரையில் உள்ள தற்போதைய காந்தி நினைவு அருங்காட்சியகம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடமாகும். இது நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்தது. தமுக்கம் அரண்மனை என்று அழைக்கப்படும் இது கி.பி 1670 இல் கட்டப்பட்டது, 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த அரண்மனை, கட்டடக்கலை நேர்த்திக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது, இது ஒவ்வொரு பார்வையாளரையும் கவர்ந்திழுக்கிறது. இருப்பினும், பின்னர் இந்த அரண்மனை காலனித்துவக் காலத்தில் பிற வம்சங்களின் ஆட்சியாளர்களின் கீழ் வந்தது, மேலும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களின் கீழ் வந்தது. இது மதுரையின் பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. 1955ஆம் ஆண்டு, இந்த அரண்மனையைத் தமிழக அரசு அகில இந்திய காந்தி ஸ்மாரக் நிதிக்கு பரிசாக வழங்கியது. மதுரையில் ஒரு காந்தி நினைவு அருங்காட்சியகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டது. இந்த அருங்காட்சியகம் காந்தி ஸ்மாரக் நிதியால் கட்டப்பட்டது மற்றும் அதே நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறது.
1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும் நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையினால் மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் 1959ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது . இந்த அருங்காட்சியகம் 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியக அமைவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நினைவில்லம் நிறுவப்பட்டது. நாத்தூராம் கோட்சேவினால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கறையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மகாத்மா காந்தி இதுவரை 20 முறை தமிழகம் வந்துள்ளார். அதில், 5 முறை மதுரைக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தினை விளக்கும் விதமான 265 ஒளியுணர் விளக்க நிழற்படங்கள் முன்னதாக நம்மை வரவேற்கின்றன. அடுத்ததாக மகாத்மாவின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் விதமாக அமைந்த ஒளிஉணர் விளக்கக் குறிப்பு இருக்கின்றது. இதில் அரிய நிழற்படங்களும், ஓவியங்களும், சிற்பங்களும், குறிப்புகளும், மகாத்மாவின் உரையில் பெற்ற அர்த்தம் பொதிந்த வாக்கியங்களும், மேலும் சில நிழற்பட நகல்களும், மகாத்மா காந்தி அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துப்பிரதிகளும் உள்ளன. மேலும் காந்தியின் குழந்தைப் பருவ 124 மிக அரிய நிழற்படத் தொகுப்புகளும் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு காந்திஜி உபயோகப்படுத்திய 14 அசல் உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது காந்தி இறக்கும்போது அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த அசல் மேல்துண்டு இங்கு காற்றுப்புகாத கண்ணாடிப் பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் காந்திஜியைக் கொலை செய்ய நாதுராம் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.