கல்வான் மோதலுக்கு பின் அதிரடி முடிவு; சீனப் பயணிகள் இந்தியா வருகைக்கு பச்சை கொடி: 5 ஆண்டு கால தடை முழுமையாக நீக்கம்
புதுடெல்லி: சீனக் குடிமக்களுக்குச் சுற்றுலா விசா வழங்கும் நடைமுறையை உலகம் முழுவதும் மீண்டும் அமல்படுத்தி இந்தியா உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை மோதல் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக, சீனக் குடிமக்களுக்கான சுற்றுலா விசாவை இந்தியா ரத்து செய்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளாகப் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில், எல்லைப் பிரச்னைகளைத் தீர்த்து நல்லுறவை மேம்படுத்தப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் மாதம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டதுடன், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வர்த்தக விமானச் சேவையும் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தத் தொடர் நல்லிணக்க நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக, சீனக் குடிமக்களுக்குச் சுற்றுலா விசா வழங்கும் நடைமுறையை இந்தியா தற்போது உலகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதலே பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் விசா சேவை குறிப்பிட்ட அளவில் தொடங்கப்பட்டிருந்தாலும், தற்போது நவம்பர் மாதம் முதல் உலகின் எந்த நாட்டில் வசிக்கும் சீனக் குடிமக்களும் இந்தியச் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து அதிகாரிகள் தரப்பில், ‘இது இரு தரப்பு நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான மிக முக்கியமான நகர்வு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.