இந்தியாவுடனான நட்பை பிரிக்க முடியாது; அமெரிக்காவின் முயற்சி நிச்சயம் தோற்கும்: ரஷ்யா திட்டவட்ட அறிவிப்பு
மாஸ்கோ: அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான உறவை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நிச்சயம் தோல்வியடையும் என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா விலகி இருக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கைகளையும் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சூழலில், இந்தியாவுடனான தங்களது நட்புறவை சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு முயற்சியும் நிச்சயம் தோல்வியிலேயே முடியும் என ரஷ்யா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவதை பாராட்டுகிறோம். சர்வதேச விவகாரங்களில் இந்தியா கடைப்பிடிக்கும் யுக்தி சார்ந்த தன்னாட்சியும், நீண்டகால நட்பின் பாரம்பரியமுமே இதற்குக் காரணம். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, இறையாண்மை மற்றும் தேசிய நலன்களின் அடிப்படையில் நம்பகத்தன்மையுடனும், கணிக்கக்கூடிய வகையிலும், உண்மையான யுக்தி சார்ந்த தன்மையுடனும் திடமாக முன்னேறி வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தங்களையும் மீறி, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி இறக்குமதியை நிறுத்தவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, சீனாவின் இறக்குமதி அளவை நெருங்கியுள்ளது. மேலும், ரஷ்யாவுடன் உயர் மட்ட அளவிலான தூதரக உறவுகளையும், பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.