தோழிகள் கிண்டல் காதலி பேச மறுப்பு மாணவன் விஷம் குடிப்பு
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முன்பே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு 17 வயது மைனர் பெண்ணோடு சாட்டிங் செய்து வந்தார். இதனால் இருவருக்கும் முகம் அறியாமல் காதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் தினமும் இன்ஸ்டா மூலம் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
கல்லூரி சார்பில் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயிற்சிபெற அந்த மாணவன் அனுப்பி வைக்கப்பட்டார். இதனையறிந்த அந்த 17 வயது மைனர் பெண் தானும் ஓசூரில் உள்ள செல்போன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறினார். இதனால் உற்சாகமடைந்த அந்த மாணவன், அந்த மைனர் பெண்ணை நேரில் சந்தித்துள்ளார். இதனையறிந்த மைனர் பெண்ணின் தோழிகள், அந்த மாணவன் உனது தம்பியா? என கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.
இதனையறிந்த மாணவி, அந்த மாணவனிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் செல்போன் எண்ணை பிளாக் செய்ததாகவும் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவன் நேற்றுமுன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மாணவனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.