பதவியேற்று ஒரு மாதத்திற்குள் பிரான்ஸ் பிரதமர் செபஸ்டின் ராஜினாமா
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமரான செபஸ்டின் ஒரே மாதத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் 9ம் தேதி 47வது பிரதமராக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் செபஸ்டின் லிகோர்னு பதவியேற்றார். பல நாட்களாக நடந்த ஆலோசனைகளுக்கு பின் நேற்று முன்தினம் அவர் தனது அமைச்சரவையை நியமித்தார். லிகோர்னுவின் அமைச்சர்கள் தேர்வு அரசியலில் மிகவும் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக முன்னாள் நிதியமைச்சர் புருனே லு பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் பணியாற்றுதற்கு கொண்டு வருவதற்கான அவரது முடிவு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
மேலும் சிறப்பு அரசியலமைப்பை பயன்படுத்தப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக இடது மற்றும் வலது சாரி எம்பிக்களுடன் சமரசம் செய்ய முயற்சிப்பதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் திடீரென பிரதமர் செபஸ்டின் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்று ஒரு மாதத்திற்குள்ளாக அவர் ராஜினாமா செய்துள்ளார். செபஸ்டின் பதவி விலகலை அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய பிரதமருக்கான தேர்வு தீவிரமடைந்துள்ளது.