பிரெஞ்ச் பிரைஸ்சில் ஒளிந்திருக்கும் நீரிழிவு நோய்: ஆய்வில் அதிர்ச்சி; 100 கிராமில் 300 கலோரிஸ்; வேகவைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது நல்லது; மருத்துவர்கள் அறிவுறுத்தல்
தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில், துரித உணவுகள் (Fast Food) மக்களின் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இவற்றில் பிரெஞ்சு பிரைஸ் (French Fries) பலருக்கு விருப்பமான உணவாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓட்டல்கலுக்கு சென்றால் முதலில் பிரெஞ்ச் பிரைஸ் தான் ஆர்டர் செய்வார்கள். அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இது திகழ்ந்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்றில் பிரெஞ்ச் பிரைஸ் தொடர்ந்து சாப்பிடுவதால் வகை 2 நீரிழிவு நோயின் (Type 2 Diabetes) அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஆய்வு முடிவுகள், உணவுப் பழக்கத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ‘தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ (The British Medical Journal) என்ற பிரபல மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் உருளைக்கிழங்கு சார்ந்த உணவுகள், குறிப்பாக பிரஞ்சு பிரைஸ், வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது என்று கூறுகிறது. ஹார்வர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் உணவு மற்றும் உடல்நலத் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில், 22,300 பேர் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளின்படி, வாரத்தில் மூன்று முறை அல்லது அதற்கு மேல் பிரஞ்சு பிரைஸ் உட்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 20சதவீதம் அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பிரெஞ்ச் பிரைஸ் தயாரிக்கப்படும் முறையாகும். இவை பெரும்பாலும் அதிக அளவு எண்ணெயில் வறுக்கப்படுவதால், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் (Trans Fats) மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன. இவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி, வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை உயர்த்துகின்றன.
உருளைக்கிழங்கு, குறிப்பாக பிரஞ்சு பிரைஸாக மாற்றப்படும்போது, அதிக கிளைசெமிக் குறியீட்டைக் (Glycemic Index) கொண்ட உணவாகிறது. இது ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்துகிறது, இதனால் கணையம் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீண்ட காலமாக இந்த நிலை தொடரும்போது, உடல் இன்சுலினுக்கு எதிர்ப்புத் திறன் பெறுகிறது, இது வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.ஆனால், உருளைக்கிழங்கை வேகவைத்தோ, சுட்டோ அல்லது மசித்தோ உட்கொள்ளும்போது, இந்த அபாயம் குறைவாக உள்ளது.
இது போன்று சமையல் முறைகளில் கூடுதல் கொழுப்புகள் சேர்க்கப்படுவதில்லை. மேலும் உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை அளிக்கின்றன. பிரெஞ்ச் பிரைஸ்க்கு மாற்றாக முழு தானியங்களை (Whole Grains) உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 19 சதவீதம் வரை குறைக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கோதுமை பாஸ்தா, பழுப்பு அரிசி, ஓட்ஸ், மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நீரிழிவு நோய் நிபுணர் ராம் குமார் கூறியதாவது: பிரெஞ்ச் பிரைஸ் எண்ணெயில் பொரித்தால் அதிக கலோரி கொண்ட பொருளாக மாறுகிறது. சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். அந்த ஆய்வில் வேகவைத்த உருளைக்கிழங்கை விட பிரெஞ்ச் பிரைஸ் சாப்பிடும் போது 20 சதவீதம் ஆபத்து ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மேற்கொண்ட இந்த ஆய்வில் சில குறைகள் இருந்தாலும் இதின் முடிவுரை அனைத்தும் உண்மையாக இருக்கும்.
இதற்கு முன்பு உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஆபத்து என வந்து உள்ளது, ஆனால் தற்போது எந்த வகை உருளைக்கிழங்கு சாப்பிட்டால் ஆபத்து என தெரியவந்துள்ளது. பிரெஞ்ச் பிரைஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சிறுதானியம் சாப்பிடலாம் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கலோரிஸ் பிரச்சனை மட்டுமின்றி எந்த முறையில் தயாரிக்கிறார்கள் என்பதை வைத்து தான் ஆபத்தா? இல்லையா? என்று கூறமுடியும் என்பதையும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துரித உணவுகள் பொதுவாக ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம், மற்றும் கலோரிகள் அதிகம் கொண்டவை.
இவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை உயர்த்துவதோடு, இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. பொதுவாக பர்கர், மற்ற துரித உணவு சாப்பிடும்போது அதிக ஆபத்து என நமக்கு தெரியும் ஆனால் தற்போது இந்த உணவு இவ்வாறு சாப்பிடுவதால் ஆபத்து என தெரியவந்துள்ளது. வாரத்திற்கு 3 முறை பிரஞ்சு பிரைஸ் சாப்பிடுவதற்கு 20 சதவீதம் வர வாய்ப்புள்ளது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பிரெஞ்ச் பிரைஸ் தவிர்ப்பது நல்லது. வேகவைத்த உருளைக்கிழங்கில் தண்ணீர் சத்து அதிகமாக இருக்கும் ஆனால் வறுக்கப்பட்டதில் எண்ணெ் அதிகமாக இருக்கும். 100 கிராம் பிரெஞ்ச் பிரைஸ் 300 கலோரிஸ் கொண்டவை, ஒரு நாளுக்கு மனிதர்கள் 1500 முதல் 1800 கலோரிஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே 300 கலோரிஸ் என்றால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது பொரிக்காமல் சாப்பிடுவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
* தவிர்க்க வேண்டிய உணவுகள்
வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சர்க்கரை பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு. மேலும் பர்கர், பீட்சா, பிரஞ்சு பிரைஸ், வறுத்த கோழி, பஜ்ஜி, வடை, பூரி என அதிக கொழுப்பு உள்ள உணவுகள் சுவையில் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. ஊறுகாய், கேன்ட் உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ் என அதிக உப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* நீரிழிவு நோய் (Diabetes)
வராமல் தடுக்கும் உணவுகள்
கோதுமை, சிறுதானியங்கள், பச்சை இலைக் காய்கறிகள் (ப்ரோக்கோலி, கீரை), பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு பழங்களை சப்பிடலாம், புரதம் நிறைந்த முட்டையின் வெள்ளை, மெலிந்த இறைச்சி, குறைந்த கொழுப்பு பால் உள்ளிட்ட உணவுகளை எடுத்துகொள்ளலாம்.
* உருளைக்கிழங்கை ஆரோக்கியமாக சாப்பிடுவது எப்படி?
சுண்டவைத்த உருளைக்கிழங்கு மசாலா, இனிப்பு உருளைக்கிழங்கு சாட், சுவையான மசித்த உருளைக்கிழங்கு, மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வெட்ஜஸ், பாணி ஸ்டஃப்டு பேக் உருளைக்கிழங்குகள்.