எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் டேங்கர் மூடி திறந்து கிடந்ததால் பரபரப்பு
ஆவடி ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் சரக்கு ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. அங்கு நின்றிருந்த பயணிகள் அனைவரும் 3வது நடைமேடைக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டனர். அரக்கோணம் மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களும் 3வது நடைமேடை வழியாக இயக்கப்பட்டன.
இதை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் டேங்கர் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது, சரக்கு ரயிலின் 9வது டேங்கர் மேல்மூடி திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் டேங்கின் மேல்மூடியை பாதுகாப்பாக மூடினர். இதனால் டேங்கர் ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் ஒருமணி நேரம் நிறுத்தப்பட்டது. அனைத்து டேங்கின் மூடிகளும் சரியாக உள்ளதை உறுதி செய்த பிறகு சரக்கு ரயில் புறப்பட்டது.
கடந்த வாரம் திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் எரிபொருள் நிரப்பிய சரக்கு ரயிலின் டேங்கர் மூடி திறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கார்டு உரிய நேரத்தில் கண்டறிந்து தகவல் தெரிவித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.