விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 21 ஆயிரத்தில் இருந்து 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 11,500ல் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்தப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியமும் உயர்கிறது.
மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு 01.10.1966 முதல் அரசியல் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஆரம்பத்தில் மாதமொன்றிற்கு ரூ.50/- வழங்கப்பட்டது. மேற்கண்ட ஓய்வூதியமானது. படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த 15.08.2024 முதல் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.21,000 ஆகவும், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களான மனைவி, கணவர், முதிர்வயதடையாத குழந்தைகள் ஆகியோருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.
முதலமைச்சர் அவர்கள் 15.08.2025 அன்று நடைபெற்ற 79-வது சுதந்திரத் திருநாள் விழாவின்போது, சென்னை, தலைமைச் செயலகத்தின் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றி வைத்த பின் ஆற்றிய உரையில், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தியாகச் செம்மல்களைச் சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.21,000/- லிருந்து ரூ.22,000/-ஆக உயர்த்தப்படும் எனவும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500/-லிருந்து ரூ.12,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாநில அரசு ஓய்வூதியத்தினை மாதமொன்றிற்கு ரூ.21,000/-லிருந்து ரூ.22,000 ஆகவும், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாநில அரசு குடும்ப ஓய்வூதியத்தினை மாதமொன்றிற்கு ரூ.11,500 லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தி வழங்கலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது. மேற்கண்டவாறு உயர்த்தி வழங்கப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூ.27,63,750/- (ரூபாய் இருபத்தி ஏழு இலட்சத்து அறுபத்தி மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இந்த ஓய்வூதிய உயர்வானது 15.08.2025 முதல் நடைமுறைக்கு வந்தது.