கருத்துரிமையை மீறும் வகையில் ஆபாச நடிகையின் ‘கணக்கை’ முடக்கியது தப்பு: மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனம்
பொகோடா: கொலம்பியா நாட்டின் பிரபல ஆபாச நடிகையான எஸ்பெரான்சா கோம்ஸின் இன்ஸ்டாகிராம் கணக்கை மெட்டா நிறுவனம் சமீபத்தில் முடக்கியது. 50 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட இவரது கணக்கு, இன்ஸ்டாகிராமின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தொடர்பான விதிகளை மீறியதாகக் கூறி நீக்கப்பட்டது. இதை எதிர்த்து எஸ்பெரான்சா கோம்ஸ், கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது நடிப்பு தொழில் காரணமாகவே கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், இது தனது வேலை செய்யும் உரிமையைப் பாதிப்பதாகவும், உரிய விளக்கம் அளிக்காமல் மெட்டா நிறுவனம் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தெளிவான மற்றும் வெளிப்படையான காரணமின்றி மெட்டா நிறுவனம் கணக்கை நீக்கியுள்ளதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகள், கொலம்பியா அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிமன்றம், மெட்டா நிறுவனம் தனது விதிகளைப் பாரபட்சமாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தது. இதுபோன்ற உள்ளடக்கங்களைக் கொண்ட பிற கணக்குகள் செயல்பாட்டில் இருக்கும்போது, எஸ்பெரான்சாவின் கணக்கு மட்டும் நீக்கப்பட்டது ஏற்கத்தக்கதல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், பயனர்கள் தங்களது கணக்கு முடக்கம் போன்ற முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறைகளைத் தெளிவாக வரையறுக்கவும், பாலியல் தொடர்பான உள்ளடக்கத்திற்கான விதிகளை இன்னும் துல்லியமாக வரையறுக்கவும் மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.