சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்பட 9 புதிய அறிவிப்புகள் வெளியீடு: மலைப்பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணமில்லா விடியல் பயணம், தேசியக் கொடி ஏற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுத்திட, அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதுதான் ஒரே தீர்வு. இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தக்க தருணம் தற்போது வந்துவிட்டது என்று சுதந்திர தின உரையில் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் என்பது உள்பட 9 அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
சென்னை, தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது: தியாகத்தில், போராட்டத்தில், களத்தில் சளைத்தவர்கள் அல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை வரலாறு சொல்லும். அந்த தியாகிகளை, பெயரளவில் நினைவுகூர்ந்து மறப்பவர்கள் அல்ல நாம். அதன் அடையாளம்தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் பார்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மணிமண்டபங்கள் - சிலைகள். இவற்றில் பெரும்பாலும் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன.
நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய அரசுதான் திமுக அரசு. இந்த வரிசையில், இன்றைய திராவிட மாடல் ஆட்சியிலும் தொடர்ந்து தியாகிகளைப் போற்றி வருகிறோம். விடுதலை நாளின் 75வது ஆண்டு பெருவிழாவையொட்டி வெகுசிறப்பாக நாம் கொண்டாடினோம்.
* செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தினோம். வ.உ.சி.மறைந்த நவம்பர் 18 தியாக திருவுருவ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தியுள்ளோம். உத்தரபிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்கவும், புதுப்பிக்கவும் அரசின் சார்பில் ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து ஒப்படைக்கப்பட்டது.
* கிண்டி காந்தி மண்டபத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் உருவச் சிலையும், மருது சகோதரர்கள் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
* கடலூரில் அஞ்சலை அம்மாள் சிலை வைக்கப்பட்டுள்ளது.
* விடுதலைப் போரா ட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி - ஒளி காட்சிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* காந்தி மண்டபம், அருங்காட்சியகம், காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விடுதலைப் போ ராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பருக்கு திருப்பூர் மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
* தனது வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டுக்கு வந்தவர் காந்தியடிகள். அரையாடை அணிவது என்ற முடிவை மதுரை மண்ணிலிருந்து தான் காந்தியடிகள் எடுத்தார். இதன் அடையாளமாகச் சென்னை அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்துள்ளோம்.
* விடுதலைப் போராட்டத்தின் பவள விழாவையொட்டி, கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.20,000, குடும்ப ஓய்வூதியத்தை ரூ.10,000 ஆகவும் உயர்த்தியுள்ளோம். அதேபோல், விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கும் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறது.
* முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தினை அறிவித்திருந்தேன். இந்தத் திட்டத்தினை வரும் 19ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. அந்தத் திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் மாவட்டக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, இந்தப் படைவீரர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 848 அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதில் 348 விண்ணப்பங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. தொழில்முனைவோர் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மானியம் அரசால் வழங்கப்படவுள்ளது.
1967ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைவதற்கு முன்பு, சென்னையில் காந்தி மண்டபம், கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபம், ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. இல்லம் என விடுதலைப் போராட்ட வீரர்களுக்காகத் தமிழ்நாட்டில் மூன்று நினைவு மண்டபங்கள்தான் இருந்தன. திராவிட முன்னேற்றக் கழக அரசு தியாகிகளையும், தியாகத்தையும் போற்றும் அரசு என்பதால்தான், நமது கழக ஆட்சிக்காலங்களில், இத்தனை நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன.
14 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 11.19 விழுக்காடாக அதிகரித்து, மாபெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது சொல்லியிருந்த 9.69 விழுக்காட்டைவிட இது கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு அதிகம். இந்தியாவிலேயே மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.
இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத மாபெரும் வளர்ச்சி. ஏன், நாட்டினுடைய வளர்ச்சியே 6.5 விழுக்காடுதான். ஆனால், தமிழ்நாடு 11.19 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது. இந்த வீர விடுதலைத் திருநாளிலும் ஒன்பது முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அதனை தொடர்ந்து 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.
பின்னர் தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்த ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும். கடந்த 75 ஆண்டுகளில், நமது அரசியல் களம் கண்ட மாற்றங்களால், அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பல முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நிலையையும் நாம் காண்கிறோம். கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில், மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன.
ஒன்றிய அரசின் சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளாலும், மாநில அரசுகளுக்கான நிதிப் பங்கீட்டிலும், திட்டங்களிலும் ஒன்றிய அரசு காட்டும் பாரபட்சத்தாலும், ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைக் களைந்திட ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கினை மீட்டெடுத்திட, அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதுதான் ஒரே தீர்வு.
இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தக்க தருணம் தற்போது வந்துவிட்டது என இந்த விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன். மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியை எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
சுயசார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போது தான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு. தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களில் ஒருவனாக, இந்திய நாட்டு மக்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக - எனது மனமார்ந்த விடுதலை நாள் நல்வாழ்த்து.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* திராவிட ஆட்சிக்கு கிடைத்த வெற்றிகள்
* நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் தமிழ்நாடு 788 புள்ளிகளுடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
* சமூக முன்னேற்றக் குறியீடுகளில் பெரிய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
* இந்தியாவில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள மக்கள்தொகை 11.2 விழுக்காடு. ஆனால், தமிழ்நாட்டில் 1.43 விழுக்காடு மக்கள்தான் வறுமைக் கோட்டுக்குக்கீழ் இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திடும் பணியில் நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
* ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள், அதன் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளோம்.
* பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 47 விழுக்காடு.
* தொழில்முனைவோர் தரவரிசைப் பட்டியலில், 2018ல் கடைசி இடத்தில் இருந்து, 2022ல் முதலிடத்துக்கு முன்னேறி இப்போது பெஸ்ட் பெற்பாமர்.
* ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்திய நாட்டிலேயே 80.89 புள்ளிகளுடன் முதல் இடம்.
* மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில், தேசிய அளவில் 37 விழுக்காடு பெற்று நாட்டிலேயே முதன்மை மாநிலம்
* ஜவுளி மற்றும் தோல் பொருட்களின் ஏற்றுமதியில் முதன்மையான மாநிலம்.
* ஒட்டுமொத்த நாட்டின் காலணி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு, 38 விழுக்காடு.
* 2024ம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகளில், விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் நமது தமிழ்நாடு
* மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாகச் சேவை புரிந்ததற்கு முதல் மாநிலமாக விருது.
* மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்.
* காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி - தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு விருதுகள்.
* காகிதம் இல்லாச் சட்டமன்றத் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியமைக்காக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் விருது.
* உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காக விருது.
* மாநில கூட்டுறவு வங்கியின் சிறந்த சேவைக்கான விருது.
* மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா.விலேயே விருது.
9 அறிவிப்புகள்;
* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.
* விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல் பெற்றுவரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.
* இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ.15 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.
* இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ.8 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.
* தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை, மாதவரத்தில் 33 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி ரூ.22 கோடியில் கட்டப்படும்.
* தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.
* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.