ரூ.3,700 கோடி மோசடி மன்னன் சிறையில் இருந்தபடியே நீதிபதிக்கு மிரட்டல்: போலீஸ்காரரின் போனை பயன்படுத்தியது அம்பலம்
லக்னோ: பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிறையில் உள்ள கைதி, போலீஸ் கான்ஸ்டபிள் செல்போனைப் பயன்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘பான்சி’ திட்டத்தின் மூலம், சுமார் 3,700 கோடி ரூபாய் சைபர் மோசடி செய்த வழக்கில் மூளையாகச் செயல்பட்ட அனுபவ் மிட்டல் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர், தற்போது லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த அஜய் குமார் என்ற போலீஸ் கான்ஸ்டபிளின் செல்போனை அனுபவ் மிட்டல் பயன்படுத்தியுள்ளார். அந்த செல்போனிலேயே புதிய மின்னஞ்சல் கணக்கு ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு நீதிபதி ஒருவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சல் அடுத்த நாள் காலை நீதிபதிக்குச் செல்லும் வகையில் திட்டமிட்டு அனுப்பப்பட்டுள்ளது. தன்னுடன் சிறையில் உள்ள சக கைதி ஒருவரைப் பழிவாங்கும் நோக்கில், அவரது பெயரில் இந்த மிரட்டலை மிட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டல் மின்னஞ்சல் போலீஸ் கான்ஸ்டபிளின் செல்போனில் இருந்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அனுபவ் மிட்டல் மற்றும் கடமையில் அலட்சியமாக இருந்த காவலர் அஜய் குமார் ஆகியோர் மீது குற்றவியல் மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவலர் அஜய் குமார் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.