சென்னையில் போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை செய்து மோசடி செய்த வழக்கில் மேலும் இருவர் கைது
சென்னை: சென்னையில் போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை செய்து மோசடி செய்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரில் வசித்துவரும் திரு.சுப்பிரமணி, வ/55, த/பெ.பெரியசாமி பிள்ளை என்பவர் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் அவருக்கு சொந்தமான மடிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 4715 சதுர அடி கொண்ட 2 வீட்டு காலி மனைகளை மோசடியாக அபகரிக்க வேண்டும் என்று திட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், சொத்தின் உரிமையாளராகிய தான் இறந்துவிட்டது போலவும், கே.கே நகரை சேர்ந்த பிரியா என்ற ஆள்மாறாட்ட நபர் மட்டுமே வாரிசு என்ற படி போலியான வாரிசு சான்று ஏற்படுத்தி வேளச்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து தன்னுடைய வீட்டுமனைகளை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் சுமார் ரூ.2 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டு தரும்படி கூறியிருந்தார்.
அதன் பேரில் மத்தியகுற்றப்பிரிவு, போலி ஆவண புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கில் முறையான விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் அருண், உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் ராதிகா. அறிவுறுத்தலின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் கீதாஞ்சலி கண்காணிப்பில், போலி ஆவண புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் செல்வி.காயத்ரி அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாரின் விசாரணையில் சென்னை, கே.கே நகரை சேர்ந்த குற்றப் பின்னணியுடை ராகேஷ் மற்றும் மடிப்பாக்கம் கார்த்திக் ஆகியோர் திட்டமிட்டு அவர்களது கூட்டாளிகளான வெங்கடேசன், பால சுந்தர ஆறுமுகம் @ வசந்த், சாலமன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து புகார்தாரரின் தாய் பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து, அதே போன்று போலியான ஆவணம் தயார் செய்து பிரியா, க/பெ.தீனதயாளன் என்பவர் மட்டுமே வாரிசு என்று போலியான வாரிசு சான்று பெற்று மேற்கண்ட சொத்தை கீழ்கட்டளையை சேர்ந்த நிர்மல்குமார் என்பவரிடம் ரூ. 1,55,00,000/- பணத்தை பெற்றுக்கொண்டு கிரையம் செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
அதன் பேரில் பிரியா, பாலசுந்தர ஆறுமுகம் மற்றும் சாலமன்ராஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய எதிரிகளான கே.கே நகரைச் சேர்ந்த 1.ராகேஷ், வ/36, என்பவரை வளசரவாக்கம் பகுதியில் 22.10.2025 அன்றும் 2.மடிப்பாக்கம் கார்த்திக், வ/54 என்பவரை நேற்று (23.10.2025) மாடம்பாக்கம் பகுதியிலும் தகுந்த புலனுடன் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப்பின்னர் நேற்று CCB & CBCID நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.