மோசடி ஆட்களுக்கு பணம் கொடுக்காதீர்கள்: யுஜிசி எச்சரிக்கை
சென்னை: யுஜிசியின் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று தருவதாக பொய்க்கூறி யாரேனும் பணம் கேட்டால் புகார் அளிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு விவரம்: யுஜிசி பெயரைப் பயன்படுத்தி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன்படி சில நேர்மையற்ற நபர்கள், யுஜிசியின் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று தருவதாக பொய்க்கூறி மோசடியாக பணம் கேட்பது கவனத்துக்கு வந்துள்ளது. எந்தவொரு தனிநபரையோ அல்லது நிறுவனத்தையோ எவ்வித பணிகளுக்கும் பணம் கேட்க அல்லது ஒப்புதல் அளிக்க யுஜிசி அங்கீகரிக்கவில்லை.
இதையடுத்து இந்த விவகாரத்தில் பொதுமக்கள், கல்லூரிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடியான சம்பவங்களுக்கு இரையாக வேண்டாம். இதுதொடர்பாக யாரும் உங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது யுஜிசியின் 011-23239337, 23604121 என்ற தலைமை விஜிலென்ஸ் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.