நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்
*மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டி புஞ்சவயல் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மைமூனா தலைமை தாங்கினார்.கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில்:
‘‘மாணவ மாணவிகள் உடல் ஆரோக்கியம் பெற தரமான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். மாணவர்கள் அதிகம் விரும்பும் நொறுக்கு தீனிகளில் சேர்க்கப்படும் அதிக கொழுப்பு, சர்க்கரை, சுவையூட்டிகள் மற்றும் உப்பு உள்ளிட்ட ரசாயனங்கள் உடல் பருமன், பல் பிரச்னைகள், இதயம் சார்ந்த பிரச்னைகள் புற்றுநோய் மற்றும் நீரிழிவு அபாயத்தை உருவாக்குகின்றன.
மேலும் குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வதால் அதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் கல்சியம் குறைபாட்டை உருவாக்கி பற்களை சிதைக்கவும், ஞாபக திறனை குறைப்பதுடன், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவே நொறுக்கு தீனிகளால் மாணவர்கள் கல்வியில் விளையாட்டில் இதர திறன் சார்ந்த போட்டிகளில் சாதிக்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே இவற்றை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளான பழங்கள்,காய்கறிகள், சிறுதானிய உணவுகள், பால் உள்ளிட்டவை எடுத்து கொள்ள வேண்டும்.
இவற்றில் உள்ள புரதம், விட்டமின்கள், நார்ச்சத்துகள், தாது உப்புகள் உடல் வளர்ச்சிக்கும், தசை ஆரோக்கியத்திற்கும், சிறந்த செயல்பாடுகளுக்கும் உதவும். தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார்.
ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசியதாவது, பதப்படுத்தபட்ட உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயdங்கள் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தி விடும் என்றார் மாணவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.