ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நான்கு முனை வியூகம்; சீனாவுடன் சமாதானம்; ரஷ்யாவுடன் கூட்டணி: அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி வைத்த ‘செக்’
தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் மூலம் சீனாவுடன் சமாதானமும், ரஷ்யாவுடன் கூட்டணியும், அமெரிக்காவுக்கு நெருக்கடியும் பிரதமர் மோடி கொடுத்துள்ள நிலையில், தீவிரவாதத்தை ஆதரிக்கும் பா்கிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உச்சி மாநாட்டில் பேசினார். கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற எல்லை மோதல்களைத் தொடர்ந்து, இந்திய - சீன உறவுகளில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே பெரிய அளவில் சந்திப்புகள் நடைபெறவில்லை. இதே வேளையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதித்து பொருளாதார அழுத்தத்தைக் கொடுத்து வந்தது. இத்தகைய சிக்கலான சர்வதேச அரசியல் பின்னணியில், சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25வது உச்சி மாநாடு நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முன்னதாக, நேற்று பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, எல்லைப் பகுதிகளில் நிலவும் வேறுபாடுகளுக்குத் தீர்வு கண்டு, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். ‘எல்லைகளில் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு அமைதியான சூழல் நிலவுகிறது. சீனாவுடனான உறவுகள் அர்த்தமுள்ள திசையில் நகர்ந்துள்ளன’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த சந்திப்பு, இருதரப்பு உறவுகளின் நிலையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் சீனா உறுதியளித்துள்ளது. மாநாட்டின் தொடக்க உரையில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், உலகின் சில நாடுகள் வெளிப்படுத்தும் அடாவடித்தனமான நடத்தை மற்றும் மேலாதிக்கத்தை கடுமையாகச் சாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘பனிப்போர் மனநிலை, கூட்டணி மோதல்கள் மற்றும் மிரட்டல் போக்கு ஆகியவற்றை நாம் எதிர்க்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சர்வதேச உறவுகளில் புதிய முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.
வெளி சக்திகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்காது’ என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது, அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டின் இறுதி நாளான இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியப் பிரதமர் மோடி உட்பட 20க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்கமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், மாநாட்டிற்கு வருகை தந்த தலைவர்களை வரவேற்றார். தொடர்ந்து, ஷாங்காய் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் தனியாக நின்று சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகி கவனம் ஈர்த்தன. மாநாட்டின் இடையே, பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புடினும் தனியாகச் சந்தித்தபோது, ஒருவரையொருவர் கைகுலுக்கி ஆரத்தழுவிக்கொண்டனர். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது, சீனாவின் தியான்ஜினில் கலந்துரையாடல்கள் தொடர்கின்றன.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டேன்’ என்றும் அவர் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘தீவிரவாதம் (பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல்) பிராந்திய அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தொடர்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றிற்கு எதிரான கொள்கையை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் பதிவு செய்தது. கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் சுமையை இந்தியா சுமந்து வருகிறது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதை முற்றிலுமாகத் தடுப்பதற்கும், இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் தீவிரமயமாக்கலைத் தடுப்பதற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு விரிவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மேலும், இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் தீவிரமயமாக்கல் தடுப்பு முயற்சிகளை உறுப்பு நாடுகள் முன்னுதாரணமாகக் கொள்ளலாம். இணையவழி தீவிரவாதம் மற்றும் ஆளில்லா ட்ரோன்களால் ஏற்படும் புதிய அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும்’ என்றார்.
மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘சர்வதேச அரங்கில் சில நாடுகளின் அடாவடித்தனமான மற்றும் மிரட்டல் நடத்தையை கண்டிக்கிறேன். பனிப்போர் மனப்பான்மையை விடுத்து, அனைத்து நாடுகளும் நேர்மை, நீதி மற்றும் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் மொத்தப் பொருளாதாரம் சுமார் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கியுள்ளது. சீனா மட்டும் 84 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது. பிராந்திய சவால்களை எதிர்கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு வளர்ச்சி வங்கி மற்றும் புதிய பாதுகாப்பு மையம் ஆகியவற்றை விரைவாக உருவாக்க வேண்டும். மேலும், உறுப்பு நாடுகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 100 சிறிய அளவிலான திட்டங்களைச் சீனா செயல்படுத்தும். ஷாங்காய் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆவர். ஒருவருக்கொருவர் வேறுபாடுகளுக்கு மதிப்பளித்து, ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்துக் கலாசாரங்களும் நல்லிணக்கத்துடனும் செழிப்புடனும் தழைத்தோங்க முடியும்’ என்றும் குறிப்பிட்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் மூலம் சீனாவுடன் சமாதானமும், ரஷ்யாவுடன் கூட்டணியும், அமெரிக்காவுக்கு மறைமுக நெருக்கடியும் கொடுத்துள்ள பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பா்கிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நான்கு முனையில் வியூகம் அமைத்து பேசியது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இந்த மாநாட்டின் முடிவில், அடுத்த பத்தாண்டுகளுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி வியூகம் மற்றும் ‘தியான்ஜின் பிரகடனம்’ கையெழுத்தானது. எகிப்து, துருக்கி, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. மாநாட்டின் நிறைவாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் அளித்த வரவேற்பு விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்றிரவு ெடல்லி திரும்புவார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.