லாட்ஜில் புகுந்து 4 பேரை வெட்டி; கடத்தப்பட்ட புதுப்பெண் கணவருடன் சேர்த்து வைப்பு: கைதான 9 பேர் சிறையிலடைப்பு
நாகை: கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகவாராவை சேர்ந்தவர் டேனியல்(50). இவரது மனைவி கலையரசி(38). இவர்களது மகன் ராகுல்(22). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜாராவ். இவரது மகள் கீர்த்தனா(21). தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். 4 ஆண்டுகளாக ராகுலும், கீர்த்தனாவும் காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவா சென்றனர். இதையறிந்த ராகுலின் பெற்றோர் அவர்களை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்து கடந்த 10ம் தேதி திருமணம் செய்து வந்தனர். இதுதெரிந்து அங்கு வந்த கீர்த்தனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 11ம் தேதி வேளாங்கண்ணி விடுதிக்கு வந்து ராகுல், அவரது பெற்றோர், உறவினரை அரிவாளால் வெட்டிவிட்டு கீர்த்தனாவை காரில் கடத்தி சென்றனர். காயமடைந்த 4 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராகுல் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும், கடலூர் சேத்தியாதோப்பு பகுதியில் சென்ற காரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து கீர்த்தனாவை மீட்ட போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரது தந்தை ராஜாராவ்(43), உறவினர்கள் வென்கோப்ராவ்(33), புனித்குமார்(37), ராமநாத்ராவ்(40), விஜய்(35), கார்த்திக்(35), மஞ்சேஸ்வரி(36), சவிதா(39), கோனனஹல்லி(30) ஆகிய 9 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நாகை நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் ராகுலுடன் செல்வதாக கீர்த்தனா தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்புடன் கணவருடன் கீர்த்தனாவை அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கீர்த்தனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணவரை பார்க்க சென்றார்.